இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்
கிழக்கு மாகாணத்தில் நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அங்குள்ள காடு மற்றும் ஏரி பகுதிகள் சுற்றுலாத்துறைக்காக மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தின் 149 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் நேற்று(08) கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
பால் பண்ணையாளர்களின் உரிமை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் 10 வருடங்களில் திருகோணமலை நகரின் அபிவிருத்தி, மகாவலி A மற்றும் B பிரிவுகளின் அபிவிருத்தி மற்றும் விவசாய நவீனமயமாக்கல் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன் மூலம் இந்த மாகாணங்களில் புதிய பொருளாதாரம் உருவாக்கப்படுகிறது.
தற்போதைய பிரச்சினையான பால் பண்ணையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மட்டக்களப்பு மாவட்டம் கல்வியினால் அபிவிருத்தியடைந்துள்ளது.
ஆனால் பொருளாதாரம் இன்னும் வலுவாக இல்லை. அடுத்த 10 வருட திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பொருளாதார ரீதியாக பலப்படுத்த எதிர்பார்க்கிறோம். மகாவலி திட்டத்தின் ஊடாக இந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய அதிபர் ஜே.ஆர் ஜயவர்தன திட்டமிட்டிருந்தார்.
இந்தியாவுடன் திருகோணமலை
ஆனால் யுத்தம் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. தற்போது திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுடன் இணைந்து பாரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பியகமவில் 400 ஏக்கர் முதலீட்டு வலயம் உள்ளது. ஆனால் திருகோணமலை 1000 ஏக்கர் முதலீட்டு வலயத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகம் முறையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
அதற்கான திட்டத்தை சுபானா ஜூரான் சிங்கப்பூர் நிறுவனம் தயாரித்துள்ளது. அதனை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அப்போது திருகோணமலை பாரிய நகரமாக உருவாகும்.
மேலும் இது பொருளாதார ரீதியாக வலுவான மையமாக மாறும். மறுபுறம், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார்.