ஓய்வு பெற்றவருக்கு சேவை நீடிப்பு வழங்குவது மக்கள் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் : ஜி.எல்.பீரிஸ்
சி.டி.விக்கிரமரத்னவுக்கு சேவை கால நீடிப்பு வழங்காமல் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய காவல்துறைமா அதிபரை உடனடியாக நியமிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவல பகுதியில் இன்று (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு
“நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.கொலை,கொள்ளை மற்றும் மனித கடத்தல் ஆகியன பகிரங்கமாகவே இடம்பெறுகிறது.
நிறைவடைந்த ஒன்பது மாத காலத்திற்குள் மாத்திரம் 80 இற்கும் அதிகமான துப்பாக்கிச் சூடு சம்பங்கள் பதிவாகியுள்ளன.
40 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சமூக கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறைக்கு கட்டளைப்பிறப்பிக்க நிலையான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலை காணப்படுகிறது. காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்ததன் பின்னர் அவருக்கு ஆறுமாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சேவை நீடிப்பு காலம் நேற்றுடன் நிறைவுப் பெற்றது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது முரண்பட்டதாக காணப்படுகிறது.
அரசாங்கத்தின் உள்ளக முரண்பாடுகளினால் புதிய காவல்துறைமா அதிபர் நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் காணப்படுகிறது.
காவல்துறைமா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்காமல் அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய காவல்துறைமா அதிபரை நியமிக்க வேண்டும்.
புதிய காவல்துறைமா அதிபரை நியமிக்காமல் ஓய்வு பெற்றவருக்கு தொடர்ந்து சேவை நீடிப்பு வழங்குவது அரச நிர்வாக கட்டமைப்பின் மீதான மக்கள் நம்பிக்கையை பலவீனப்படுத்தும்.”என்றார்.