பட்டாசு ஆலை வெடிவிபத்து; உயிரிழப்பு 12ஆக உயர்வு – உரிமையாளர் உள்பட இருவர் கைது!
அரியலூர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
தீபாவளி பண்டிகையையொட்டி பல பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்புடன் பணிகள் நடைபெற்றாலும், சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி பகுதியில், பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம், விறகாலூர் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் 15க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டனர்.
12 பேர் பலி
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக திருமானூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த விபத்தில் சிக்கி ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் எரிந்து நாசமானது.
இச்சம்பவம் தொடர்பாக பட்டாசுகடை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.