சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி
சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் அதிபர் சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
அதன் படி, இந்தக் கப்பலானது எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எளிமையான பயணம் இல்லை
இதன்படி, சீனக் கப்பல் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘சீனா மிகவும் முக்கியமான நாடு, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் உள்ளன, சீனக்கப்பலின் இந்தப் பயணமானது சாதாரண எளிமையான பயணம் அல்ல, இந்த குறித்த காலப்பகுதியில் நிகழவுள்ள அத்தனை விடயங்களையும் எதிர்கொள்வதற்கு இலங்கை முழுமையாக தயார் நிலையில் இருக்க வேண்டும்” என சீனக்கப்பலின் விஜயம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.
மேலும், நாட்டின் உள்ளக நடைமுறைகளுக்கமையவே திகதியினை வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.