சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள – பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை
சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள பௌத்த ஆதிக்கவாதம் ஆழமாக வேருன்றியுள்ளதாக இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டக்களப்பில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களையும் பௌத்த மதகுருவையும் சிறிலங்கா காவல்துறையினர் நடத்திய விதங்களுக்கிடையிலான வித்தியாசம், இதற்கு சிறந்த உதாரணமென அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறையின் அராஜகம்
நில ஆக்கிரமிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரங்களை முன்வைத்து அண்மையில் மட்டக்களப்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
எனினும், மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது, அவருடனும் அவரது ஆதரவாளர்களுடனும் காவல்துறையினர் மிகவும் அமைதியான முறையில் பேச்சுக்களை முன்னெடுத்ததாக இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான பேர்ள் எனும் மக்கள் அமைப்பு கூறியுள்ளது.
அத்துடன், தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா காவல்துறையினரின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் பல வருடங்களாக தொடர்ந்து வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உரிமைகளுக்கான ஒடுக்குமுறை
தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கான தங்கள் உரிமையை பயன்படுத்துவதில் பல தடைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதில் காவல்துறையினர் பிரதான பங்கு வகிப்பதாகவும் பேர்ள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ் மக்களின் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமை ஆகியவற்றினை இலங்கை தொடர்ந்தும் ஒடுக்குவதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.