ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு வேட்பாளரே வெற்றிவாகை: நம்பிக்கையில் மகிந்த
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யார் அந்த வேட்பாளர் என்று உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்சி தலைமைத்துவம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழ்ந்து போகவில்லை. எமது கட்சி இன்னமும் வீரியத்துடன் இருக்கின்றது. ஆனால், கட்சியின் தலைமைத்துவத்தில் நிச்சயம் மாற்றம் வரும். எந்நாளும் எம்மால் அப்பதவியில் இருக்க முடியாது.
புதியவர்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையேற்க முன்வர வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. உரிய நேரத்தில் அறிவிப்பு விடுக்கப்படும்.
எமது கட்சி களமிறக்கும் வேட்பாளரே வெற்றியடைவார். அதேவேளை, சர்வதேச நாணய நிதியம் கூறுவது போல் தான் இந்த அரசு செயற்பட வேண்டும் என்றில்லை. மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.