இஸ்ரேல்: 10 மாத இரட்டை குழந்தைகளை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றி உயிரை விட்ட தம்பதி!
இஸ்ரேலில் பயங்கரவாதிகளிடமிருந்து தங்களது இரட்டை குழந்தைகளை காப்பாற்றிவிட்டு தம்பதியினர் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்களும், ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்தனர். பல பெண்களை இருசக்கர வாகனங்கள், கார்களில் வைத்து கடத்தினார்கள். மேலும், வீடு வீடாக சென்று பலபேரை கொன்று குவித்தனர். காசாவில் உள்ள கஃபர் நகரில் இட்டாய்-ஹதர் பெர்டிசெவ்ஸ்கி என்ற இளம் தம்பதியினர் தங்களது 10 மாத இரட்டை குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
உயிரை விட்ட தம்பதியினர்
அங்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் வீடுவீடாக புகுந்து இஸ்ரேலியர்களை கொல்ல தொடங்கினர். அப்போது தங்களது குழந்தைகளை காப்பாற்ற முடிவு செய்த அந்த தம்பதியினர் அவர்களை மறைத்து வைத்துள்ளனர். அந்த நேரம் அங்கு வந்த பயங்கரவாதிகள் இட்டாய்-ஹதர் தம்பதியினரை கொன்றுவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட முயன்றும் அந்த தம்பதியினரால் உயிர் பிழைக்க முடியவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மறைத்து வைக்கப்பட்ட 10 மாத இரட்டை குழந்தைகள், 14 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டன. இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் குழந்தைகளை பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர்.