பானையை திருமணம் செய்துகொள்ள சொல்லும் பெற்றோர்..சமூக வலைத்தளத்தில் புலம்பும் பெண்
ஒரு சில பிரச்னைகள் ஏற்படும் பொழுது அதற்காக சில பரிகாரங்கள் கூறப்படுவதுண்டு. குறிப்பாக திருமணம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் இருந்தால் வாழை மரத்தை திருமணம் செய்து, அதை வெட்டிய பின்பு மறுமணமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது வேறு ஏதேனும் குறிப்பிடத்தக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் பழக்கத்தில் இருந்து வருகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் மும்பையில் நடந்திருக்கிறது. மும்பையில் 26 வயதான பெண் ஒருவரை, அவரது பெற்றோர்கள் ஒரு பானையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்கள். பானையைப் பரிகாரமாக திருமணம் செய்து கொண்டால் தான் அவரது கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் அப்போது தான் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ முடியும் என்று கூறியுள்ளனர்.
அந்தப் பெண், இதைப் பற்றி reddit தளத்தில் பகிர்ந்துள்ளார். ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் இந்த யோசனைகளை முழுவதுமாக எதிர்க்கிறேன். ஆனால், நான் எனது பெற்றோர்களை எதிர்க்கிறேன், அவர்களை மதிக்கவில்லை என்று அவர்கள் என்னுடைய கடவுள் நம்பிக்கையின்மையை தவறாக புரிந்து கொள்கிறார்கள்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
தனது பெற்றோர்கள் தன்னைத் தீவிரமாக கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்று நினைத்த பெண்ணுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. தினசரி இதைப் பற்றி பேசியே வீட்டில் நிம்மதி இல்லாமல் போனதாக அப்பெண் கூறியுள்ளார். முட்டாள்தனமாக இருக்கிறது. மன ரீதியாக தன்னை மிகவும் பாதிக்கிறது. இது உண்மையா? இப்படி செய்வார்களா? என்று அப்பெண் தளத்தில் விளக்கம் கோரியுள்ளார்.
‘வீட்டில் அப்பா அம்மா என்ன செய்தாலும் நான் அமைதியாக இருக்க வேண்டுமென்று ஓரளவுக்கு என்னை தயார் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் இது கட்டாயமாக செய்து தான் தீர வேண்டுமா என்பது எனக்கு இன்னும் குழப்பமாக இருக்கிறது. இதை எப்படி நான் கொஞ்சம் எளிமையாக மாற்றுவது என்று எனக்கு யாராவது ஆலோசனை சொல்லுங்கள்’ என்று அந்த பெண் உதவி கோரியிருக்கிறார். பலரும் அந்த பெண்ணுக்கு உதவும் வகையில் தங்களுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.