வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு: வெளிநாட்டிலுள்ள மனைவி உட்பட மூவர் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சம் அடைந்த அவரது மனைவி உட்பட 3 எதிரிகளையும் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (10.10.2023) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3 பேர் கைது
2002 புரட்டாசி மாதம் வவுனியாவில் வீட்டில் தீ பரவி நாடாளுமன்ற உறுப்பினர் மரணித்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை வழக்கு நடைபெற்று வந்தது.
பிணையில் விடுதலையான மனைவி வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தீ எப்படி பரவியது என்பது சம்பந்தமாக எதுவித சான்றும் அரச தரப்பில் முன்வைக்கப்படவில்லை.
தீ எரியும் போது மனைவி, மகன், மனைவியின் தங்கை இருந்துள்ளனர். மகனும் தீயால் காயமடைந்துள்ளார். நள்ளிரவு 1.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாட்சி
எனினும் மனைவி தீ வைத்து கொலை செய்ததாக கண்கண்ட சாட்சியமோ, சூழ்நிலைச் சாட்சியோ முன்வைக்கப்படவில்லை.
மற்றைய இரு சந்தேகநபர்களும் தீ எரிந்த போது வீட்டில் இருக்கவில்லை, உண்மையில் தீ எவ்விதம் பரவியது என்பதற்கு பொலிஸ் விசாரணையில் சான்று பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
குறிக்கப்பட்ட வழக்கில் 3 எதிரிகளுக்கும் எதிராக சாட்சியங்கள் எதுவும் நிரூபிக்கப்படாததால் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள மனைவி உட்பட மூவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.