;
Athirady Tamil News

Asian Games: பதக்கம் வென்ற வீரர்கள்; ‘வரலாறு படைத்துள்ளீர்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம்!

0

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.

ஆசிய விளையாட்டு
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த வாரம் நடந்து முடிந்தது. 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர். இதுவரை இல்லாத அளவில் இந்த முறை நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்றது.

28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 107 பதக்கங்களை வென்று 4வது இடத்தை பிடித்தது இந்தியா. மேலும் வரலாற்றில் 100 பதக்கங்களை தொட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது “விளையாட்டு வீரர்கள் சிறந்ததைப் பெறுவதை உறுதி செய்வதற்காக அரசு அனைத்து தடைகளையும் அகற்றும். ஆசிய விளையாட்டில் நீங்கள் 100 பதக்கங்களைத் தாண்டி விட்டீர்கள்.

பிரதமர் மோடி பெருமிதம்
அடுத்த முறை, இந்த சாதனையை நாம் முறியடிக்க வேண்டும். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக உங்கள் சிறந்த முயற்சியை மேற்கொள்ளுங்கள். இந்தியாவில் திறமைக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்திருக்கிறது.

நீங்கள் புதிய தலைமுறையினரை ஊக்குவிக்கும் புதிய வழிகளைத் திறந்துள்ளீர்கள். இந்த செயல்திறன் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் நான் பெருமையடைகிறேன்.வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வழங்கியுள்ளனர். இந்திய மகள்களின் தகுதியை இது காட்டுகிறது.

நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். 140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்களை நான் வரவேற்கிறேன். நம் நாட்டில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். ஆனால், சில தடைகளால் அவர்களின் திறமை பதக்கங்களாக மாறாமல் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் போதையில்லா இந்தியா என்ற செய்தியைப் பரப்ப வேண்டும்” என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.