ஒரு வினாடி கூட இந்திய படகுகளுக்கு இடமில்லை: டக்ளஸ் அதிரடி அறிவிப்பு!
ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (10) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் அதுவும் குறிப்பாக வடக்கில் வாழ்கின்ற தமிழ் கடற்தொழிலார்கள் மிகுந்த சிரமங்களையும் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார்கள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இதற்கு தீர்வு காணும் பொருட்டு இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவுக்கு படகில் சென்று தமிழ்நாட்டு முதலமைச்சருடனும், பாண்டிச்சேரி முதலமைச்சருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்கள்.
அதன் விளைவாக தற்போது சில நாட்களாக இந்திய இழுவை படகுகள் இங்கு வரவில்லை, என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் பிரச்சினை இலங்கை கடற்படையினுடைய பிரச்சினை அல்ல இலங்கையில் வடக்கில் வாழுகின்ற தமிழ் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை என்றும் அதற்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது என்றும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.
மக்களும் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.