ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஒருபோதும் இடமளிக்கவே மாட்டோம்: சாகர காரியவசம் திட்டவட்டம்
“தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். எனவே, தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிகள் இடம்பெறும் பட்சத்தில் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம்” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் நபருக்கு அப்பதவியை வகிப்பதற்குக் கால எல்லை ஒன்று இருக்கின்றது.
நாடாளுமன்றத்துக்கும் அப்படிதான். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது ஜனநாயகத்துக்காகப் போராடும், குரல் கொடுக்கும் கட்சியாகும். மகிந்த ராஜபக்ச காலத்தில் முன்கூட்டியே தேர்தல்கள் நடத்தப்பட்டன.
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு இல்லை. எனவே, குறித்த காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
தேர்தல் உரிமைக்கான நடவடிக்கை
மக்களுக்கு உள்ள இந்த ஜனநாயக உரிமையைப் பறிப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அந்தவகையில் உரிய காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எங்கும் கருத்து வெளியிடப்படவில்லை, சமூகத்தில் இருந்தும் அவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்படவில்லை.
எனினும், தேர்தலை ஒத்திவைக்க முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கபோவதில்லை. தேர்தல் உரிமையைப் பெறுவதற்காக எல்லா வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.