அரசுக்கே விபூதி அடித்த அரசு பள்ளி டீச்சர்; 24 வருஷமாவா..? அதிர்ந்து போன அதிகாரிகள்!
தேனியில் 24 ஆண்டுகளாக ஆசிரியர் ஒருவர் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியையாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
போலி சான்றிதழ்
தேனி மாவட்டம் பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயபானு (47). இவர் தேனி ஆண்டிபட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 1999ம் ஆண்டு முதல் தொடங்கி 24 ஆண்டுகளாக விஜயபானு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவரது சான்றிதழ்கள் போலி என தொடக்க கல்வி அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் விசாரணை
இதனையடுத்து அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் 12ம் வகுப்புக்கு கொடுத்தது போலியான சான்றிதழ் என்பதும், மோசடி செய்து 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தேனி மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதி, விஜயபானு மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கண்டமனூர் போலீசார் அரசு நிர்வாகத்தை ஏமாற்றுவது, போலியாக ஆவணங்களைத் தயாரிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.