ஐஎம்எப் இன் இரண்டாம் தவணை கடன் விரைவில் : இலங்கையின் எதிர்பார்ப்பு
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கையைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம், அதன் நிதியுதவியின் அடுத்த தவணையான சுமார் 334 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான சீனா எக்சிம் வங்கியுடன், கடன் மறுசீரமைப்புக்கான முக்கிய கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக இலங்கையின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம், நிலுவையில் உள்ள சுமார் 4.2 பில்லியன் டொலர்களை உள்ளடக்கியது.
விரைவான பொருளாதார மீட்சி
இந்தநிலையில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கிய படியாக அமைவதுடன், விரைவான பொருளாதார மீட்சிக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கையானது இலங்கையின் பொருளாதார மீட்சியை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது என்று திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த சில வாரங்களில், இலங்கை அதிகாரிகளும் சீனா எக்சிம் வங்கி அதிகாரிகளும், கடன் மறுசீரமைப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீவிரமாக செயற்படுவர் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.