விடுதலைப் புலிகள் உயிர்ப்புடன்! உளவுத் தகவலை வெளியிட்ட சரத் வீரசேகர
ஈழக் கனவு தற்போதும் உள்ளதால் மீண்டும் விடுதலைப் புலிகள் கட்டியெழுப்படும் சாத்தியக் கூறுகள் உள்ளமை தொடர்பாக இந்தியாவில் இருந்து புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர, கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் வாலை மாத்திரமே அழித்துள்ளதாகக் கூறியுள்ள சரத் வீரசேகர, அதன் தலை மற்றும் உடல்கள் தற்போதும் ஐரோப்பிய நாடுகளில் செயற்றிறன்மிக்க வகையில் செயற்படுவதாகவும் ஈழக் கனவை தமிழ் பிரிவினைவாதிகள் கைவிடவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யுத்தக் குற்ற தீர்மானம்
அதிபரின் ஊடகப் பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைச் சுட்டிக்காட்டிய அவர், சிறிலங்கா இராணுவத்தினரின் மன தைரியத்தை சிதைக்கும் வகையில் நுழைவு விசைவுகளை வழங்குவதற்கு அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மறுப்பதாகக் கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களை இழைக்கவில்லை என்பது மேற்குலக நாடுகளுக்கு தெரிந்திருக்கின்ற போதிலும், தமது சுய லாபங்களுக்காகவே ஜெனீவாவில் தீர்மானங்களை கொண்டுவருவதாக சரத் வீரசேகர தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஈழக் கனவு தற்போதும் இருக்கன்றது. புலம்பெயர் தமிழர்களில் தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், பிரிவினைவாத தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் என இரு தரப்பினர் உள்ளனர்.
தனிநாட்டிற்கான பயணம்
பிரிவினைவாத தமிழ் புலம்பெயர்ந்தவர்கள், நிதியை அனுப்பி, நாட்டை பிரிப்பதற்கு, அல்லது யுத்தத்தின் ஊடாக செய்ய முடியாதததை வேறு வழிகளில் செய்வதற்கான நோக்கம் அவர்களுக்கு இன்னும் இருக்கின்றது.
வெளிநாடுகளுடன் இணைந்து எமது இராணுவத்திற்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவந்து, இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இராணுவத்தை ஒடுக்கும் அதேவேளை தனிநாட்டிற்கான பயணத்தை மிகவும் சூட்சுமாக முன்னெடுத்து வருகின்றனர்.
மீண்டும் யுத்தமொன்றுக்கு செல்லாமல் வேறு வழிகளில் ஊடாக அதனைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
தற்போது புலனாய்வு தகவல் ஒன்றும் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன” என்றார்.