ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு முக்கிய செய்தி
மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு இதனைக் கூறிவைக்க விரும்புவதாக தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைக்க கூட்டுச் சதி
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனநாயகத்தை சகல விதங்களிலும் மீறி இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டியிருந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அதிபர் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தால் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடக்க வேண்டிய மாகாண சபை தேர்தலையும் நான்கு வருடங்களாக பிற்போட்டுள்ளனர்.
அவ்வாறே நாடாளுமன்றத் தேர்தலையும், அதிபர் தேர்தலையும் கூட்டுச் சதிகள் மூலம் ஒத்திவைக்க மந்திரம் ஓதி வருகின்றனர்.
மக்களால் வேண்டாம் என்று விரட்டியடிக்கப்பட்டவர்களை எவ்வாறு வீட்டுக்கு அனுப்புவது என்பதையே இன்னும் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
அமைச்சரவை பத்திரத்தையும் அதிபர் சமர்ப்பித்துள்ளார். மக்கள் எதிர்ப்பை அடக்க பல்வேறு சட்ட மூலங்களை கொண்டு வருகின்றனர். ஒரு புறம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்றும் நிகழ் நிலை காப்பு என்ற சட்டத்தை மறுபுறமாகவும் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
தலைமைத்துவ மாற்றம்
மக்கள் கருத்துக்கு இடமளிக்காது ஆட்சியில் தொடர்ந்தும் நீடிக்கவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு கூறுகிறோம்.
அரசாங்கத்தின் மக்கள் விரோத சட்ட மூலங்களை எதிர்த்து நாம் நீதிமன்றத்தை நாடியுள்ளோம், நாடாளுமன்றத்தில் எதிராக குரல் எழுப்பி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், அவ்வாறே நாடாளுமன்றத்திற்கு வெளியே சகலரையும் இணைத்துக் கொண்டு இதற்கு எதிராக செயற்படுவோம்.
அதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும்” – என்றார்.