இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்க முடியாது : ரணில் விக்ரமசிங்க
இந்து சமுத்திரமானது வளர்ந்துவரும் உலக பொருளாதாரத்திற்குள் முக்கியமான பங்கு வகிப்பதாகவும், உலக அரசியலுக்குள் எடுக்கப்படும் தீர்மானங்களே அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் எனவும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலசாரம், வர்த்தகம் மற்றும் ஒன்றோடு ஒன்று பிணைந்து காணப்படும் நாகரிக பாரம்பரியத்தை கொண்ட இந்து சமுத்திரத்தின் ஒற்றுமையை எவராலும் சிதைக்கவோ துடைத்தெறியவோ முடியாதெனவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
காலியிலுள்ள தனியார் நட்டத்திர விடுதியில் 2023 ஆம் ஆண்டுக்கான காலி கலந்துரையாடல் இடம்பெற்றது.
“இந்து சமுத்திரத்தில் உருவாகும் புதிய ஒழுங்கு முறை” என்ற தொனிப்பொருளின் கீழ் 11 சர்வதேச அமைப்புகள் , 44 நாடுகளின் சமுத்திரவியல் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை பிரதானிகளின் பங்கேற்புடன் இன்றும் நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மூன்று தசாப்தங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதன் அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதற்காக, 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட காலி கலந்துரையாடல் சமுத்திரவியல் மாநாடு 11 ஆவது தடவையாக இடம்பெறுகின்றது.
மூலோபாய அமைவிடம்
இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரம் என்பது ஒரு எழுச்சி அல்ல என்றும் அது நாகரிகம் என தெரிவித்தார்.
இந்து சமுத்திரம் என்பது ஆசிய – பசுபிக், இந்து – பசுபிக், மற்றும் ஒரே தடம் – ஒரே பாதை என்று எவருக்கும் சொந்தமில்லாத அரசியல் அமைப்பாகும் என்றும் கூறினார்.
இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு இணையாக வளைகுடா சமவாயத்தின் நாடுகள் குறித்தும் சிந்திப்பதாக கூறினார்.
அதனால் இந்து சமுத்திரத்திற்குள் பாரிய இரு பொருளாதார மத்தியஸ்தானங்கள் உருவாகி வருவதாக கூறிய அவர், 2050 களில் ஆபிரிக்கா துரித வளர்ச்சியை அடையுமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனால் மேற்கு, ஆசிய மற்றும் இந்திய பொருளாதார கேந்திர நிலையங்கள் என மூன்று பிரிவுகள் உருவாகலாம் என்றும் அதிபர் தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய அமைவிடத்தை கொண்டுள்ளமையினால் கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மிகப்பெரிய விநியோக மத்தியஸ்தானமாக மாற்ற முடியும் என கூறினார்.
மற்றுமொரு துறைமுக உருவாக்கம்
அதனால் கிழக்கு இந்திய சமுத்திர அபிவிருத்தியின் பிரதிபலன்களை நாமும் அடைந்துகொள்ள முடியும் எனவும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஆபிரிக்காவுடன் தொடர்புபடுத்தி வர்த்தக துறைமுகமாக மாற்ற முடியும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று உலகின் பிரதான துறைமுகங்கள் வரிசையில் டுபாய் துறைமுகம் இணைந்துள்ளதாகவும் அதேபோல் மேலும் பல துறைமுகங்களும் இணைந்துள்ளமையினால் இலங்கையும் இந்த போட்டிக்குள் இருக்க வேண்டுமானால் மற்றுமொரு துறைமுகத்தை உருவாக்க வேண்டும் என கூறினார்.
மேலும் இந்து சமுத்திரத்தில் கடல்சார் சுதந்திரம் மற்றும் கடலுக்கடியில் அமைக்கப்படும் கம்பிவடங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.