கண்டுகொள்ளாத காங்கிரஸ் – ஷர்மிளா அதிரடி முடிவு
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.டி.பி. என்ற கட்சியைத் தொடங்கி தெலங்கானாவில் கால் பதிக்க பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் அவரது தங்கை ஷர்மிளா. ஆனால் பெரிதாகச் சோபிக்கவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்த அவர், உள்ளூர் முதல் டெல்லி வரை முயற்சித்துப் பார்த்தார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் சந்திப்புகள் நடத்தியும் ஷர்மிளாவை காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளவே இல்லை. காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை அக்டோபர் 1க்குள் தெரிவிக்க ஷர்மிளா கெடு விதித்தும் எந்த பதிலும் இல்லை.
இதனிடையே தெலங்கானாவுக்கு நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அடுத்தகட்ட முடிவை உடனடியாக எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ஷர்மிளா.அந்த வகையில், தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் ஷர்மிளா.
காங்கிரஸ் கட்சிக்காக 4 மாதங்கள் காத்திருந்தும் காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை என கூறியுள்ள அவர், தான் 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். ஷர்மிளாவின் அறிவிப்பால் தெலங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.