இலங்கை – இந்தியாவிற்கிடையில் மீண்டும் தூசு தட்டப்படும் பாரிய திட்டம்!
இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையேயான முன்மொழியப்பட்ட மின்சாரம் கடத்தும் பாதையின் இணைப்புப் புள்ளிகளாக இலங்கையின் வடமேற்குப் பகுதியில் உள்ள மன்னார் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள மதுரை ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் மின்துறை செயலாளர்கள் தலைமையிலான செயற்குழுவின் பரிசீலனைக்கு பின்னர் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான மின் இணைப்புத் திட்டமானது 2003 ஆம் ஆண்டளவில் முன்மொழியப்பட்டு நீண்ட நாள் உறக்கத்தின் பின்னர் இப்போது மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடலுக்கு அடியில்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான அண்மைக்கால விஜயத்தின் விளைவாக இந்த திட்டம் மீள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடையாளம் காணப்பட்ட இந்த இணைப்பு புள்ளிகள் மாற்றப்படாவிட்டால், முன்மொழியப்பட்ட மின் பாதையின் மொத்த தூரம் சுமார் 280 – 300 கிலோ மீட்டர்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் இலங்கை தரப்பு கடலுக்கு அடியில் மற்றும் மேல்நிலை கம்பிகள் ஆகியவற்றில் மின் வடங்களை பயன்படுத்துவதற்கு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.
இந்த முன்மொழிவுகளின் படி முதற்கட்ட மதிப்பீடாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவாகும் என கூறப்படுகிறது, கடலுக்கடியில் மின்வடங்களைப் பயன்படுத்தினால் இந்த செலவு இன்னமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.