;
Athirady Tamil News

தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவர் இன்று காலமானார்!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று இறைபதம் அடைந்தார்.

தனது 77 ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தியுள்ள அன்னாரின் உடல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

படவிளக்கம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, இரண்டு தடவைகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவான பொன்னம்பலம் செல்வராசா 1946 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி பிறந்தார்.

நாடாளுமன்ற தெரிவு
அரச ஊழியராக பணியாற்றிய அவர், ஒய்வு பெற்ற பின்னர் கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

எனினும் 2000 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றிபெற முடியாமல் போயிருந்தது.

இதனையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை கழகம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கின.

அதன்பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொன்னம்பலம் செல்வராசா மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவர் தோல்வி அடைந்திருந்தார்.

இறுதிக் கிரியைகள்
மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் உட்பட தமிழ் மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களில் ஏனைய தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பொன் செல்வராசாவும் பங்கேற்றிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப் பகுதியில் பல்வேறு நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக்களிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.

இந்த நிலையில் பொன் செல்வராசாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று பிற்பகல் 04.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயான மின் தகன சாலையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.