அரசாணை 149 ரத்தா? அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி??
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என்று ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆசிரியர்கள் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல் போன்ற 30 அம்ச கோரிக்கையை முன்வைத்து டிட்டோ ஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பல கோரிக்கைகள் தமிழக அரசிற்கு முன்வைக்கப்பட்டது.
இந்த அமைப்புகளுடன் பள்ளிக்கல்வி துறை இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் 2 மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக டிட்டோ ஜாக் அமைப்பினர் அறிவித்தனர்.
அரசாணை 149
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷுடன் இந்த சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்படும் என உறுதியளித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு பிறகு மற்றொரு போட்டி தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணை 149 ரத்து செய்யப்படும் என்றும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் எமிஸ் இணையதள பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் உறுதியளித்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.