செனல் 4 விவகாரம் தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்ற தெரிவு குழு
பிரித்தானிய ஊடகமான செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பிரேரணையை எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019ல் இலங்கையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 269 பேரை பலி கொண்டது.
செனல் 4
குறித்த தாக்குதலை விசாரித்து அதனுடன் தொடர்புடைய காணொளியை பிரித்தானியா ஊடகமான செனல் 4 நிறுவனம் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.
முதலில் ட்ரெய்லர் காணொளியையும் அடுத்ததாக முழு காணொளியையும் ஒளிபரப்பியது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தில் இருந்த மக்கள் மத்தியில் இந்த காணொளி பேசுபொருளாகியது.
அசாத் மௌலானா
குறித்த காணொளி சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானாவின் கருத்தை மையமாக கொண்டே வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் , 2018ஆம் ஆண்டு இலங்கை அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஷ் சலேவுக்கும் ஏப்ரல் தாக்குதல் குண்டுதாரிகளுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்பட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய குற்றவாளியான சஹ்ரான் பற்றியும் சஹ்ரானின் சகோதரன் பற்றியும் காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சியை கைப்பற்றுவதற்காகவே இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற தெரிவு குழு
இந்த குற்றச்சாட்டை கோட்டாபய ராஜபக்ச தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.
சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோரும் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய செனல் 4 விவகாரம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற தெரிவு குழு ஒன்றினை நியமித்து அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிபர் உத்தரவு வழங்கினார்.
இதற்கமையவே தற்போது குறித்த பிரேரணை முன்வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.