இலங்கைக்கு செல்ல அச்சப்படும் ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான கைதிகள்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரும்புகிறார்.
எனினும் அதே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மேலும் இரண்டு இலங்கை பிரஜைகள், தாம் நாடு கடத்தப்பட்டால் உயிருக்கு ஆபத்து என அஞ்சுகின்றனர் என்று இந்திய ஊடகம் ஒன்று கூறுகிறது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற சாந்தன், தாம், தேசத்திற்கு திரும்பி தனது வயதான தாயுடன் வாழ உதவுமாறு இலங்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பிய மனுவில், தாம் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சாந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறையில் இருந்தபோது தனது தாயை சந்திக்க முடியாமல் போனது.
இந்தநிலையில், விடுவிக்கப்பட்ட நிலையில், இலங்கை சென்று தனது தாயை கவனித்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை
எனினும் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளான ரொபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அஞ்சி சொந்த நாட்டிற்கு திரும்புவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
இருவரும் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயக்குமார் சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ முயன்று வருகிறார். அதேநேரம் நெதர்லாந்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் உள்ள தனது உறவினர்களுடன் சேர அனுமதிக்கப்பட வேண்டும் என்று பயஸ் கோரியுள்ளார்.