;
Athirady Tamil News

சீனாவின் திட்டத்தில் இணைந்தது இலங்கை

0

பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு ஆகியவற்றை அடைந்துகொள்வதற்கான விருப்பமே சீனாவின் ‘மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில்’ இணைவதற்கான உந்துதலாக அமைந்ததாக இலங்கை தெரிவித்துள்ளது. ‘

பின்நோக்கி ஆராய்தல், முன்நோக்கி ஆராய்தல்: மண்டலமும் பாதையும் செயற்திட்டம் தொடர்பான தென்பிராந்தியத்தின் பார்வை’ என்ற தலைப்பில் புருசேல்ஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட கொள்கை கலந்துரையாடல் நிகழ்வில் லக்ஸம்பேர்க் மற்றும் பெல்ஜியத்துக்கான இலங்கைத்தூதுவரும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தலைமைப்பிரதிநிதியுமான கிரேஸ் ஆசீர்வாதம் ஒரு பேச்சாளராகப் பங்கேற்றிருந்தார்.

அங்கு சீனாவின் ‘மண்டலமும் பாதையும் செயற்திட்டம்’ தொடர்பான இலங்கையின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், மிக அவசியமான உட்கட்டமைப்பு நிர்மாணத்திட்டங்களுக்குத் தேவையான முதலீட்டில் அச்செயற்திட்டத்தின் வகிபாகம் குறித்து விசேடமாக சுட்டிக்காட்டினார்.

அதேவேளை பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு விரிவாக்கம் மற்றும் பிராந்திய இணைப்பு என்பன சார்ந்து இலங்கை கொண்டிருந்த அபிலாஷைகளே மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் இணைவதற்குத் தூண்டுகோலாக இருந்ததாகத் தெரிவித்த கிரேஸ் ஆசீர்வாதம், இச்செயற்திட்டமானது வெறுமனே நேரடியான இணைப்பு என்பதற்கு அப்பால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க சக்திவலு உருவாக்கம், மனிதவள அபிவிருத்தி, சமூக மேம்பாடு உள்ளிட்ட உலகளாவிய நலன்களுக்கு உதவக்கூடிய கட்டமைப்பாக நிலைமாற்றமடையவேண்டுமென வலியுறுத்தினார்

அத்தோடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

நிலைபேறான பொருளாதார வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்றவற்றில் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் பங்களிப்பு எவ்வாறானதாக அமையமுடியும் என ஆழமாக ஆராயப்பட்ட இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றிருந்த ஏனைய பேச்சாளர்களும் இச்செயற்திட்டம் பற்றிய தமது அனுபவங்கள், சவால்கள் மற்றும் அடுத்தகட்டம் தொடர்பான யோசனைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.