தேர்தலுக்கு பணம் கோரும் திருத்தப்பட்ட அட்டவணையை திறைசேரிக்கு அனுப்பியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான புதிய முயற்சியாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தலுக்கு பணம் கோரும் திருத்தப்பட்ட அட்டவணையை திறைசேரிக்கு அனுப்பியுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, தேர்தலை நடத்துவதற்கு, முதலில் 2.2 பில்லியன் ரூபா மட்டுமே தேவைப்படும் என்றும், மீதமுள்ள தொகையை மூன்று மாதங்களுக்குள் விடுவிக்க முடியும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
நிலுவையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கான மற்றொரு முயற்சியாக இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நிதி நிலைமை தற்போது முன்னேற்றமடைந்துள்ளதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றையும் தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரிக்கு வழங்கிய பிரிவின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவதற்கு 1.1 பில்லியன் ரூபாய் தேவைப்படும்.
தேர்தல் செலவு
தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட முதல் 15 நாட்களில் 100 மில்லியன் ரூபாய்களும், அடுத்த 15 நாட்களில் 500 மில்லியன் ரூபாய்களும், அடுத்த 20 நாட்களில் 500 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பொலிஸிற்கு 400 மில்லியன், அரசு அச்சகத்திற்கு 200 மில்லியன், தபால் திணைக்களத்திற்கு 500 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படுகின்றன.
அதன்படி, தேர்தல் நடத்தப்படும் வரை 2.2 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று ஆணையம் கூறியுள்ளது. மீதமுள்ள 6.8 பில்லியன் ரூபாய்கள் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக திறைசேரி நிதி கிடைக்காத காரணத்தினால் இந்தவருட ஆரம்பத்தில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.