தமிழ்நாடு TO இலங்கை கப்பல் சேவை தொடக்கம்: புலம்பும் லட்சத்தீவு மக்கள்
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கேரளாவின் லட்சத்தீவுகளில் இருந்து புலம்பல்கள் தொடங்கியுள்ளன.
தமிழ்நாடு TO இலங்கை கப்பல்
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்து, அதற்காக ரூ.3 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் மூலம் கொச்சியில் கப்பல் கட்டும் பணி நடைபெற்று, முடிவடைந்து ‘சிரியா பாணி’ என பெயரிடப்பட்டது. இது, 150 பயணிகள் பயணிக்கும் வகையில் குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் 60 நாட்டிக்கல் மைல் தூரத்தில் இருப்பதால் 3.30 மணி நேரத்தில் இலங்கை செல்லலாம். இதற்கான பயண கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ. 6500 மற்றும் 18 % ஜிஎஸ்டி வரியோடு ரூ.7670 நிர்ணயிக்கப்பட்டது.
கப்பல் போக்குவரத்து அக்டோபர் 14 -ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம், தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
இந்த கப்பலில் போதுமான பயணிகள் பயணம் செய்யாததால், வாரத்தில் 3 நாள்கள் மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
லட்சதீவுகள்
இந்நிலையில், நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத் தீவுகளில் பிரச்சனை எழுந்துள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சினையும், லட்சத்தீவுகளையும் இணைக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் 4 கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
300 முதல் 400 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த கப்பலில் தான் லட்சத்தீவில் உள்ள மக்கள், மெயின் நிலத்துக்கு வந்து செல்ல பலமணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த நேரத்தில் தான் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அதிவேக கப்பல் சேவை தொடங்கியுள்ளது. இந்த கப்பல் சேவைகளை லட்சத்தீவு மற்றும் கொச்சி இடையே இயக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதன்படி, சிரியா பாணி உட்பட 3 கப்பல்கள் இயக்கப்பட்டன. இதில் உள்ள ஒரு கப்பலை தான் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், லட்சத்தீவு மக்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர். அன்றாட தேவைக்கு அதிவேக கப்பலை இயக்க வேண்டும் என்று லட்சத்தீவு மக்கள் புலம்புகின்றனர்.