புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு தொடர்பில் விசாரணை
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்த சில மணி நேரங்களுக்குள், வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலஹா மற்றும் களுத்துறை மத்திய நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்த சில மணித்தியாலங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் குறித்த வினாத்தாள்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்தநிலையில், அதனை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) 2,888 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.
இந்த முறை பரீட்சைக்கு 3 இலட்சத்து 37 ஆயிரத்து 956 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.