சனாதன சர்ச்சை: தனிப்பட்ட முறையில் பேசினேன், அமைச்சராக பேசவில்லை – உதயநிதி தரப்பு வாதம்!
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் உதயநிதி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சனாதன சர்ச்சை
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் அவருக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது.
சாமியார் ஒருவர் சனாதனத்தை பற்றி பேசிய உதயநிதியின் தலையை சீவினால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக அறிவித்தார். இதனையடுத்து அமைச்சர் உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உதயநிதி வாதம்
இந்த வழக்கில் உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை” என்று வாதாடினார்.
மேலும், ‘இறையாண்மைக்கு விரோதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவில்லை’ எனவும் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, ஆ. ராசா மீதான வழக்குகளை அகிடோபர் 31ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.