யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அமைச்சரின் பணிப்புரை!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
அதிகரிக்கப்படவுள்ள விமான சேவைகள்
பலாலி விமான நிலையத்திற்கு நேற்று (16) விஜயம் மேற்கொண்ட நிலையில் அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
சென்னையிலிருந்து நாளாந்தம் 60 பயணிகளுடன் Alliance நிறுவனத்தின் விமானமொன்று பயண வசதிகளை வழங்கி வருவதாக அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இந்தியாவின் IndiGo நிறுவனமும் சென்னை – பலாலி இடையே விமான சேவைகளை வழங்கவுள்ளது.
இந்த சர்வதேச விமான சேவைகளுக்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து DP Aviation நிறுவனத்தின் 04 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து Cinnamon Air நிறுவனத்தின் 04 விமானங்களும் உள்நாட்டு விமான சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்த விமான சேவைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கப்படுமென்பதால், பலாலி விமான நிலையத்திற்கு உள்வரும் மற்றும் வௌியேறும் பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த மேம்படுத்தல் செயற்பாடுகளுக்காக 200 மில்லியன் ரூபா வரை செலவு ஏற்படலாம் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் அதிகாரிகள் அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தற்போது காணப்படும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துதல், தீர்வையற்ற விற்பனை நிலையங்களை நிறுவுதல், சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு அவசியமான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.