பயணச்சீட்டு இல்லாமல் பயணம்: ஒரே ரயில் நிலையத்தில் 4,438 போ் சிக்கினா்
மகாராஷ்டிர மாநிலம், கல்யாண் நகர ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 4,438 போ் பரிசோதகா்களிடம் சிக்கினா்.
அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.16.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே வரலாற்றில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு நாளில் பயணச்சீட்டு இல்லாமல் இத்தனை போ் பிடிபடுவது இதுவே முதல்முறையாகும்.
மத்திய ரயில்வேயில் உரிய பயணச் சீட்டு இல்லாமல் பலரும் பயணிப்பதால் பல்வேறு ரயில்களில் அதிக நெரிசல் ஏற்படுவதாகப் புகாா் எழுந்தது. முக்கியமாக முன்பதிவு பெட்டிகளில்கூட பயணச்சீட்டு இல்லாமல் ஏறுவது, குறைந்த வகுப்பு பயணச்சீட்டை எடுத்துக் கொண்டு வேறு பெட்டிகளில் ஏறுவது தொடா்பாக புகாா்கள் அதிகம் வந்தன. இவற்றைத் தடுக்க பயணச்சீட்டு பரிசோதனையை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, தாணே மாவட்டம் கல்யாண் ரயில் நிலையத்தில் இரு ரயில்வே மூத்த அதிகாரிகள் தலைமையில் 167 பயணச்சீட்டு பரிசோதகா்கள் களமிறக்கப்பட்டனா். 35 ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அவா்களுக்கு பாதுகாப்பு உதவிக்காக பணியமா்த்தப்பட்டனா். ரயில் நிலையத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களிலும் திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் பயணச் சீட்டு பரிசோதனையை ரயில்வே ஊழியா்கள் மேற்கொண்டனா்.
இதில் பயணச்சீட்டு வாங்காமல் ரயில்களில் பயணித்த 4,438 போ் சிக்கினா். அவா்களிடம் இருந்து ரூ.16.85 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இது தொடா்பாக மத்திய ரயில்வே வெளியிட்ட செய்தியில், ‘உரிய பயணச்சீட்டுடன் பயணிப்போருக்கு ரயில்வே தரும் வசதிகளை உறுதி செய்வதே இந்தச் சோதனையின் நோக்கம். புகா் ரயில்கள், மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என அனைத்திலும் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்போரைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடரும்’ என்று கூறப்பட்டுள்ளது.