டொலர் இல்லையெனில் மீண்டும் இறக்குமதிக்கு கட்டுப்பாடு : ஒரே இரவில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம் ஏற்படுமா
இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்காலத்தில் இலங்கை ரூபாவுக்கு எதிராக பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி அதிகரிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனினும், மத்திய வங்கி அவ்வாறு அதிகரிப்பதை தடுக்கக் கூடிய சாத்தியங்களும் உண்டு.
ஒரே இரவில் ரூபாவின் பெறுமதி தேய்வடையாது
ஆரம்பத்தில் பிரச்சினைகள் அதிகரித்திருந்த காலப்பகுதியில், இலங்கை மத்திய வங்கி ரூபாவினுடைய பெறுமதியை நிலையான மட்டத்திலே பேணி வந்தது. பிறகு திடீரென்று ஒரே தடவையிலே அதனை நீக்கிக் கொண்டபடியால்தான் இலங்கை ரூபாவின் பெறுமதி, டொலர் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக திடீரென்று குறைவடையத் தொடங்கியது.
இந்தமுறை அந்த தவறை விட மாட்டார்கள். மாறாக இவ்வாறு டொலர் சந்தையில் குறைவாக வந்து கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் இலங்கை ரூபாவை தேய்வடைய அனுமதிப்பார்கள்.
அவ்வாறு அனுமதிப்பதன் மூலமாக இலங்கை ரூபாவினுடைய பெறுமதி சிறிது சிறிதாக குறைவடையக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. ஆரம்பத்தில் நடந்தது போன்று ஒரே இரவிலே அது மிகப்பெரிய அளவிலே தேய்வடையக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை.
ஆனால் இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலையை பார்க்கின்ற போது நாட்டுக்குள்ளே போதிய அளவு டொலர் உள்வருகை ஏற்படாவிட்டால் இறக்குமதிகளை ஏதோ ஒரு வகையிலே கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதேபோல, இந்த எரிபொருள் கோட்டா போன்றவற்றை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
என்னைப் பொறுத்தவரையில், டொலரினுடைய பெறுமதி ஆரம்பத்தில் நிகழ்ந்தது போல ஒரேநேரத்தில் மிகப் பெரிய அளவில் உயர்வதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே கருதுகின்றேன் என தெரிவித்தார்.