தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடியாத பிரச்சனை
தமிழக மாவட்டம், நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக மீனவர்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான படகில், சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேர் நேற்று காலை மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
அதே போல செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
இதில், மொத்தம் 2 படகுகளில் சென்ற 9 பேர் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக இவர்கள், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்ற பிறகே மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கி கடலில் தள்ளி சித்ரவதை செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவிகள் மற்றும் தங்கச்சங்கிலிகள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, கரை திரும்பிய நாகை மீனவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர் தாக்குதல் குறித்து மீனவர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.