;
Athirady Tamil News

இலங்கை ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவா நிர்வாக முடக்கல் போராட்டம்…

0

”சட்ட ஆட்சி” “ஜனநாயகம்” ”மனித உரிமை” ”நீதித்துறையின் கௌரவம்” ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவே 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிர்வாக முடக்கல் போராட்டத்தை (ஹர்த்தால்) நடத்தவுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்திருக்கிறார்.

அப்படியானால்!

இலங்கையின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவா இந்த நிர்வாக முடக்கல் போராட்டமா?

இலங்கையில் சட்ட ஆட்சி இருந்ததா? இருக்கிறதா?

2010 இல் வெளியான ஐ.நா ஆணையாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகளில் இலங்கைச் சட்ட ஆட்சியின் கேவலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை பற்றித் தெரியாதா?

சரி! நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்தினால் இலங்கையில் சட்ட ஆட்சி ஏற்படுமா?

ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா?

நீதித்துறையின் கௌரவம் பாதுகாக்கப்படுமா?

இதற்குத் தான் நிர்வாக முடக்கல் போராட்டம் என்றால், எண்பது வருடங்கள் வடக்குக் கிழக்கில் நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டங்களும் அதன் பின்னரான முப்பது வருட ஆயுதப் போராட்டமும் உள்ளிட்ட அரசியல் விடுதலைப் போராட்டத்தின் நிலை என்ன?

நீதிபதி இலங்கையை விட்டு வெளியேறினார் என்றால், அது இன்று நடந்த பிரச்சினையல்ல. 1948 இல் இருந்து இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டங்கள் தான் இன ஒடுக்கலைச் செய்கிறது.

ஆகவே இது ”இனஅழிப்பு” என்று ஒரு வார்த்தையில் அடித்துக் கூறி சர்வதேச நீதி விசாரணையைக் கோராமல்”சட்ட ஆட்சி” “ஜனநாயகம்” ”மனித உரிமை” ”நீதித்துறையின் கௌரவம்” ஆகியவற்றைப் பாதுகாப்பாதற்காக நிர்வாக முடக்கல் நடத்துவதாகக் கூறுவது வெட்கமல்லவா?

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் இனஅழிப்பு மற்றும் போர்க்குற்ற விசாரணைகளை வற்புறுத்தியும் 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தொடர்ச்சியான அறவழிப் போராட்டம் ஏன் நடத்தப்படவில்லை?

ஆகவே,

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் விபரம் தெரியாமல் அதாவது தமிழ்த்தேசிய அரசியல் பற்றிப் புரியாமல் செய்தியாளர் மாநாட்டில் நிர்வாக முடக்கல் பற்றிக் கருத்து வெளியிட்டாரா?

அல்லது ஒற்றையாட்சியையும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவையும் பாதுகாத்து சர்வதேச விசாரணை – இன அழிப்பு விசாரணைக் கோரிக்கைகள் அனைத்தையும் திசை திருப்பும் நோக்கமா?

தடம்மாறித் திசைமாறிப் போய்விட்டீர்கள் என்பது மாத்திரம் பட்டவர்த்தனம். இலங்கை ஒற்றையாட்சித் தோ்தல்களில் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றுவது மாத்திரமே தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகளின் வியூகம் என்பதும் பகிரங்கமான உண்மை.

இந்த உண்மை முகத்தின் வெளிப்பாடுதான் இந்த நிர்வாக முடக்கல்.

குறிப்பு – இனப் பிரச்சினை தொடர்பான அதாவது ஈழத்தமிழர் அரசியல் விடுதலை குறித்த உண்மையான கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் அல்லது சொற்றொடர்களை (Terms) அரசாங்கம் திட்டமிட்டு மடைமாற்றுகிறது என்பதைவிடவும் தமிழ்த் தேசியக் கட்சிகள்தான் வியூகம் வகுத்து மடைமாற்றம் செய்கின்றன என்பது தற்போது பகிரங்கமாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.