;
Athirady Tamil News

நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் : மாவை சேனாதிராஜா

0

தமிழ் மக்களுக்கான நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ள அனைவரும் முன்வரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று(18.10.2023) நடைபெற்ற ஊடகசந்திப்பில் இந்தக் கருத்தினை தெரிவித்த அவர், வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நீதித்துறையில் தமிழ் மக்களுக்கான இடம்
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதியான விசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதித்துறையில் தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நீதி இல்லை என்ற நிலவரம் உருவாக்கப்பட்டிருக்கின்றது . இதற்கு எதிராக தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

சட்டத்தரணிகள் வடக்கு, கிழக்கு, கொழும்பு என்று இதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுடன் இணைந்து பல்வேறுபட்ட அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இதற்கான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களது கோரிக்கைகளுக்கு இணங்க நாங்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இது தொடர்பாக வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிகள், பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த விடயங்களை முன்னெடுப்பார்கள்.

மறுக்கப்படுகின்ற நீதி
ஆகவே இலங்கையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை நாம் தான் உருவாக்கவேண்டும்.

சர்வதேச சமூகம் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகின்ற நீதியை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காமல், தமிழ் மக்களுக்கான ஒரு பாதுகாப்பை உருவாக்க வேண்டிய தேவை ஒன்று வந்திருக்கின்றது.

இந்தப் பாதுகாப்பை உருவாக்குவதற்கான நடைமுறைகளை சர்வதேசம் யோசிக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆகவே தான் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்திருக்கிறோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.