கொழும்பில் பிரபலங்களுக்கும் கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் விற்பனை செய்யப்படும் பெண்கள்
நுகேகொடை நாவல வீதியில், கால் மசாஜ் என பதாகை வெளியிட்டு பெண்கள் விற்பனை செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு நீண்ட காலமாக பிரபலங்களுக்கும் – கோடீஸ்வர வர்த்தகர்களுக்கும் பெண்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டுபிடி்கப்பட்டுள்ளது.
குறித்த இடம் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் 14 பெண்களும் அவர்களது முகாமையாளரும் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் விற்பனை
பெண்கள் மற்றும் மேலாளரை கைது செய்ததை அடுத்து, அந்த இடத்தை சோதனை செய்ததில், கருத்தடை உறைகள் உட்பட பாலியல் செயல்களுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கருவிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இணையதளத்தில் விளம்பரம் செய்து, ஆயுர்வேத கால் மசாஜ் செய்ய அழைப்பேற்படுத்திய பின்னர் வரும் நபர்களிடம், அதிக விலைக்கு பெண்கள் விபச்சாரத்துக்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது.
குறித்த பெண்களை அந்த இடத்திற்கு மேலதிகமாக வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாடகை அடிப்படை
வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்தக் கட்டிடத்தில் வெவ்வேறு வயது வரம்புக்கு ஏற்ப 7,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரையிலான விலையில் பெண்கள் பணத்துக்கு விற்கப்படுகின்றது.
அந்த இடத்தில் சேவையைப் பெற்றால் அறைக்கான வாடகை கட்டணமும் செலுத்த வேண்டும்.
குறித்த இடம் இரவு விடுதி போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கைகள் வசதியாக அமைக்கப்பட்டிருந்ததால், அரை இருண்ட மின்விளக்குகளை பொருத்தி மென்மையான இசை கேட்கும் வகையில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெண்ணை தேர்வு செய்யும் வகையில் வரிசையாக அமர வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சொகுசு கார்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள் 20 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், இரத்தினபுரி, நுவரெலியா, ஹட்டன், பொகவந்தலாவை, நீர்கொழும்பு, அவிசாவளை, கேகாலை, குருநாகல் போன்ற பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் வேலை செய்வதாக வீடுகளில் கூறிவிட்டு வந்து தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அந்த இடத்தை சோதனையிட்ட போதும் பல சொகுசு கார்கள் அவ்விடத்திற்கு வந்து திரும்பிச் செல்வதைக் காணமுடிந்ததாக சோதனையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் முகாமையாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக நுகேகொட பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.