கொழும்பில் கப்பம் வர்த்தகரை கொலை செய்ய முயற்சி: வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு
ஒரு மில்லியன் ரூபா கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற இருவரை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் உதவியாளர் ஒருவரே இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு இருவரையும் வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று பிற்பகல் கடவத்தை ராகம வீதிச் சந்திக்கு அருகில் உடனடி வீதித் தடையைப் ஏற்படுத்தி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்தி சோதனையிட்டதில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்றும் சாரதியிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
வேற்று நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், 4 துப்பாக்கி ரவைகள் வெடிமருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 29 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் மீகஹாவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கணேமுல்ல சஞ்சீவ தலைமையிலான பல கொலைச் சம்பவங்களில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகச் செயற்பட்டு தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள சக்தி லக்ருவன் என்ற நபரே இவ்விருவரையும் வழிநடத்தியுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகரிடம் கப்பம்
கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லக்ருவன் என்ற வர்த்தகரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும், அதனை அவர் வழங்காவிடின் வர்த்தகரையோ அல்லது அவரது முகாமையாளரையோ கொலை செய்யுமாறு சந்தேகநபர்கள் இருவரிடமும் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு என சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். அதற்கமைய, இரு தினங்களுக்கு முன்னர் குறித்த இடத்தைச் சோதனையிடச் சென்ற இருவரும் நேற்று கொலை செய்யச் சென்ற போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தக நிலையத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பில் களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.