தேர்தலை நடத்தாமல் தேர்தல் முறைமையை மாற்ற இடமளியோம்! சஜித் திட்டவட்டம்
தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதாக தெரிவித்து மக்களின் வாக்குரிமையை இல்லாமலாக்க இடமளிக்கமாட்டோம். அதனால் தேர்தலை நடத்தாமல் எந்த தேர்தல் முறை மாற்றத்துக்கும் ஆதரவு வழங்கமாட்டோம். அது தொடர்பான கலந்துரையாடல்களிலும் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான கலந்துரையாடலுக்கு பிரதமர் தினேஷ் குணவர்த்தன விடுத்த அழைப்பு தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தேர்தல் முறைமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,”நேரடி மற்றும் விகிதாசார முறைமையில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றவும், தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடலுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என தேர்தல்களை ஒத்திவைத்து, மக்களின் தேர்தல் உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ள தற்போதைய அரசுடன் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் முறையை மாற்றுவது குறித்து எந்தக் கலந்துரையாடலிலும் பங்கேற்காது.
தேர்தல்கள் முறைமையில் மாற்றமொன்று ஏற்படுவதாக இருந்தால், அது முறையான மக்கள் ஆணையின் பின்னரே குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் தேர்தல் முறைமையில் மாற்றம் என்ற போர்வையில் மக்களின் வாக்குரிமையை இல்லாதொழிக்க அரசு முயற்சிக்கின்றது.
இதற்கு இடமளிக்க முடியாது. உள்ளூராட்சி சபை தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட்ட பின்னரே இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க மிகுதி நிதியை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுள்ளது.
மனித உரிமை
அரசு நிதியை வழங்குமா? நீங்கள் தேர்தலை நிறுத்தி மக்களின் மனித உரிமைகளை மீறுவதற்கே முயற்சிக்கின்றீர்கள். அதனை செய்ய வேண்டாம் என்று கேட்கின்றேன்.
பல்வேறு சட்ட மூலங்களைக் கொண்டு வந்து மக்களின் வாயடைக்க முயற்சித்து வரும் இந்நேரத்தில்,தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது.
மேலும் அரசு வேண்டுமென்றே பல்வேறு சூழ்ச்சிகளைக் மேற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்துள்ள வேளையில், நல்லெண்ண அடிப்படையில் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு முன்வரவில்லை.”என தெரிவித்துள்ளார்.