சர்வதேச நாணய நிதியத்தின் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம்
நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுடையதாக சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(19) இடம்பெற்ற சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மாற்றுத்திட்டங்கள்
“நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் தன்மை தற்போது காணப்படுகிறது.நிலையான மறுசீரமைப்புகளுக்காக நாடாளுமன்றத்தின் ஊடாக ஒருசில சட்டத்திருத்தங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறுகிய கால இலக்குகளுக்கு அப்பாற்பட்ட வகையில் நிலையான இலக்குகளை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மாற்றுத்திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும்,எதிர்தரப்பினர் முன்வைத்த மாற்றுத்திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாக இருப்பதாலும் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருந்தது.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கடுமையான மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட செயற்பாடுகளை பலவீனப்படுத்தவும், மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
குறுகிய தரப்பினரது நோக்கம் வெற்றிப்பெற்றால் நாடு கடந்த ஆண்டு எதிர்கொண்ட நெருக்கடிக்கு மீண்டும் செல்லும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையுடன் இரண்டாம் கட்ட ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை கடந்த மாதம் இடம்பெற்றது.
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு,கடன் நிலைபேறான தன்மை,கடன் காப்புறுதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட தவணை தொகை வழங்கல் ஒருசில காரணிகளால் பிற்போடப்பட்டதை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.
நிபந்தனைளை ஏற்றாலும் விமர்சிக்கிறார்கள்,நிபந்தனைகளை திருத்தம் செய்தாலும் விமர்சிக்கிறார்கள்.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளில் 93 நிபந்தனைகளை 2024 டிசெம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும்.2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 51 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் 47 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒருசில நிபந்தனைகளை செயற்படுத்துவதில் நடைமுறையில் சிக்கல் நிலை ஏற்பட்டது.
மொரோக்கோ நாட்டில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கியின் வருடாந்த மாநாட்டின் போது இலங்கை விவகாரம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சகல தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் ஏனைய நிபந்தனைகள் தொடர்பில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும்.
பொருளாதார மீட்சிக்கான தற்போதைய தீர்மானங்கள் கடுமையானதாக இருந்தாலும் எதிர்காலம் சிறந்ததாக அமையும்.அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு சுபீட்சமானதாக காணப்படும்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டு மக்களுக்கு பயனுடையதாக சமர்ப்பிக்கப்படும்.”என்றார்.