;
Athirady Tamil News

நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் : ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு

0

நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்புடையதாக அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் செயற்திட்டப்பணிப்பாளர் கார்லஸ் மார்டினெஸ் டி லா செர்னா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன தொடர்பில் பல்வேறு எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இவ்விரு சட்டமூலங்கள் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி அமெரிக்காவின் நியூயோர்க் நகரைத் தளமாகக்கொண்டியங்கிவரும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐவரடங்கிய ஆணைக்குழு
இதுகுறித்து மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“செய்தி இணையத்தளங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் சமூகவலைத்தளப்பக்கங்கள் உள்ளடங்கலாக தடைசெய்யப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய இணைய அல்லது சமூகவலைத்தளப்பக்கங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தைக்கொண்டதும், அதிபரினால் நியமிக்கப்படும் ஐவரடங்கியதுமான ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு இடமளிக்கும் உத்தேச நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் கடந்த 3 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இச்சட்டமூலமானது மேற்குறிப்பிட்டவாறான கருத்துக்களை அல்லது செய்திகளைப் பிரசுரித்தமைக்காக ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கும், அவர்களுக்கு 5 வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனை அல்லது தண்டபணத்தை விதிப்பதற்குமான அதிகாரத்தை குறித்த ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்குகின்றது.

ஊடக சுதந்திரம்
அதேவேளை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மத்தியிலிருந்து எழுந்த விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்களை அடுத்து திருத்தியமைக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை கடந்த செப்டெம்பர் 15 ஆம் திகதி நீதியமைச்சு வெளியிட்டிருக்கின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டிருக்கும் இச்சட்டமூலமானது வரவேற்கத்தக்க சில திருத்தங்களைக் கொண்டிருப்பினும், அது ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தைத் தொடர்ந்தும் உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன ஊடகங்களுக்கு எதிரான மீறல்களுக்கு இடமளிக்கக்கூடியவையாகக் காணப்படுவதுடன் அவை ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பவற்றை ஒடுக்குவதற்கு அரசாங்கத்துக்கு வாய்ப்பளிக்கும்.

எனவே, இவ்விரு சட்டமூலங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு அல்லது அவை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு ஏற்புடையவையாக அமைவதை உறுதிப்படுத்தும் வகையில் இதுகுறித்து ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பரந்துபட்ட தரப்பினருடன் கலந்துரையாடுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.