லெபனானை விட்டு உடனே வெளியேறுங்கள்… மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை
அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி முதலான பல நாடுகள் லெபனானிலிருக்கும் தங்கள் குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியுள்ளன.
தொடரும் போர்ச்சூழல்
அக்டோபர் 7ஆம் திகதி திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதில் இஸ்ரேல் தரப்பில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டார்கள். இஸ்ரேல் ஹமாஸுக்கு பதிலடி கொடுத்தது, பாலஸ்தீனிய பகுதியில் 3,700 பேர் கொல்லப்பட்டார்கள்.
ஆனால், விடயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. இஸ்ரேல் மீது எப்போது வெறுப்பைக் காட்டலாம் என காத்திருந்த சில நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவகாக குரல் கொடுக்கத் துவங்கின.
லெபனான் நாட்டிலிருக்கும் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா என்னும் அமைப்பு போரில் இறங்கினால் அவ்வளவுதான் என, ஈரான் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது.
மேற்கத்திய நாடுகள் தரப்பில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக விமானந்தாங்கிக் கப்பல்களை அனுப்ப முடிவு செய்தது.
அவ்வப்போது லெபனான் தரப்பிலிருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் துவங்க, போர்ச்சூழல் மும்முரமாகியுள்ளது.
மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை
இந்நிலையில், அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி முதலான நாடுகள், லெபனானிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு தங்கள் குடிமக்களை வலியுறுத்தியுள்ளன.
அதுபோக, உலகம் முழுவதிலுமுள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கெதிராக பயங்கர தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்றும், ஆகவே அமெரிக்கர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்றும் அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று செங்கடல் மீது பறந்த ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், அவை ஏமன் நாட்டிலிருந்து ஏவப்பட்டதாகவும் ராய்ச்சர்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆக, ஹமாஸ் தாக்குதல் ஒரு பக்கம் இருக்க, லெபனானால் உருவாகியுள்ள பதற்றமும் அதனுடன் சேர்ந்துகொண்டுள்ளதால், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் லெபனானுக்கு பயணிக்கவேண்டாம் என தங்கள் குடிமக்களை எச்சரித்துள்ளன.