வெளிநாட்டுக்குச் சென்ற இலங்கை பெண் : 3 மாதங்களின் பின்னர் வெளியான அதிர்ச்சித் தகவல்
சவூதி – ரியாத் நகருக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக கிராமசேவகர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஹொரண, மதுராவளை அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ஹிருஷிகா சந்தமாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றிருந்த வேளையில் இந்தப் பெண் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக கடந்த 17ஆம் திகதி அவரது உறவினர்களுக்கு கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு அழைப்பு எடுக்காத பெண்
குடும்ப வறுமை காரணமாக மருதானையில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வமாக பதிவு செய்துவிட்டு 2021ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 2ஆம் திகதியன்று வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்களாக ரியாத்தில் உள்ள ஒரு வீட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டாருடன் தொடர்பு கொள்ளவில்லை. மற்ற மாதங்களிலும் இவ்வாறு நீண்ட இடைவெளியில் பேசியதால் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லை.
கிராமசேவகரிடம் வெளிவிவகார அமைச்சின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து அதுபற்றி விசாரிக்குமாறு உயிரிழந்த பெண்ணின் கணவர் கோரியுள்ளார்.
இறந்த பெண்ணின் கணவர் மறுநாள் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தபோது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.
மறுநாள் கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது மனைவி தொடர்பான தகவல் எதுவும் தனக்கு தெரியாது என்றும் இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் விசாரிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் பேசும் போது, 3 மாதங்களுக்கு முன்னர், அவரது மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி அவர்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
மனைவி வெளிநாடு சென்ற மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் கணவர் சென்று தொடர்பு கொண்ட போது, அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கு சென்ற பின்னர் இது தங்களுக்கும் சந்தேகத்திற்குரிய சம்பவம் என தெரிவித்துள்ளனர்.
கடவுச்சீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் காத்திருந்த உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு இது தொடர்பில் நேற்று மாலை வரை எவ்வித அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.