இஸ்ரேலியர்களால் தாக்கியழிக்கப்பட்ட பழமையான தேவாலயம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இஸ்ரேல் – பலஸ்தீன் இடையேயான போர் இன்று (20) 14 ஆவது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் வேளை போரில் புதிய அத்தியாயமாக காசாவிலுள்ள பழமையான தேவாலயம் மீது இன்று (20) அதிகாலை வேளை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட் போர்பிரியஸ் தேவாலயத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல்களை இன்று (20) அதிகாலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்ளடங்கலாக குறைந்தது எட்டு பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரைவழியான படையெடுப்பு
மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருவதாகவும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஆரம்பித்து இஸ்ரேல் தனது தரைவழியான படையெடுப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மெலும், இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரை ரஷ்யாவுடன் ஒப்பிட்டார்.
அதோடு, ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் அமெரிக்க பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 நடத்திய தாக்குதலில் 1,400 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நிகழ்த்தி இன்றுவரை தொடரும் போரில் குறைந்தது 3,785 பாலஸ்தீனியர்கள்வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.