;
Athirady Tamil News

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக புரட்சிகர திட்டங்கள்: அமைச்சர் ஜீவன் வெளியிட்ட தகவல்

0

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக முடிந்தவற்றை செய்துள்ளதாகவும் தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகிறதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச பொதுசேவைகள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களான மலையகத் மக்கள் கடந்துவந்த பாதையென்பது வலி சுமந்தது, அந்த வலி சுமந்த வரலாற்றை மாற்றியமைப்பதற்கு ஒரு பிரதான தொழிற்சங்கம் என்ற அடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புரட்சிகரமான திட்டங்களை செயற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் செயற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மறுசீரமைப்பு
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், “இலங்கை அரசாங்கமானது கடந்த காலங்களில் கொள்கை ரீதியிலான மாற்றங்களின்போது பன்முகத்தன்மை பற்றி சிந்திக்கவில்லை.2022 இல் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டமைக்கு இதுவும் காரணமாகும்.

நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தொழிலாளர்கள் பக்கம்நின்று தேவையான ஆலோசனைகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்தோம்.இதன்படி பொருளாதார மறுசீரமைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், தொழிலாளர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் உள்ள தொழில் துறைகளில் பெருந்தோட்ட தொழில்துறை முதன்மையானது.சுமார் ஒன்றரை லட்சம் பேர் அத்துறையில் வேலை செய்கின்றனர்.அதேபோல 15 லட்சம்வரை மலையகத் தமிழர்கள் உள்ளனர்.

1948 இல் குடியுரிமை பறிக்கப்பட்டது, சிறிமா ஒப்பந்தம் மூலம் பாதிபேர் நாடு கடத்தப்பட்டனர், உள்நாட்டு கலவரங்கள், போர் என எல்லாவற்றிலும் எமது மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதனால்தான் எமது சொந்தங்களின் வாழ்வு வலிசுமந்த பயணம் என குறிப்பிடுகின்றேன்.

தொழில்துறைசார் சட்டங்கள்
அம்மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு கட்சியாக, தொழிற்சங்கமாக எம்மால் முடிந்தவற்றை செய்துள்ளோம். தற்போது காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான புரட்சிகரமான திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கையில் தொழில்துறைசார் சட்டங்கள் மறுசீரமைக்கப்படுகின்றது. திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. அவை உரிய வகையில் உள்வாங்கப்படவில்லை. திருத்தி அமைக்குமாறு கோரியுள்ளோம்.

இனம், மதம், மொழிக்கு அப்பால் மனிதத்தை விரும்பும் இளைஞர் குழுவாக செயற்பட்டால் நாட்டையும், உலகையும் மாற்றலாம். இதில் அனைத்து தொழில் துறைகளும் இணைய வேண்டும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.