மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி
மட்டக்களப்பு – மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூராக மாற்றப் போகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
36வது நாளாக இன்று (20.10.2023) இடம்பெறும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு பின் இது விடயமாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வாடியில் இருந்த உடமைகள் எரிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் வாடியில் இருந்த உடமைகள் கடந்த 13ஆம் திகதி எரிக்கப்பட்டதுடன் இதுவரை ஆயிரத்துக்கு அதிகமான மாடுகள் கொலை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வாடியில் உடமைகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்ததையடுத்து அவரை அழைத்துக் கொண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்திருந்தோம்.
எனினும் இந்த விடயம் நடைபெற்று இன்றுவரை ஒரு சந்தேகநபர் கூட கைது செய்யப்படவில்லை. மயிலத்தமடு தொடர்பாக ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் குறித்த எந்தவித அறிவித்தலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தெரிவித்துள்ளார்.
பண்ணையாளர்களுக்கான நீதி
இந்த சாதாரண விடயத்துக்கு கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களே இந்த பிரச்சினையை தீர்க்க முடியாத நீங்கள்தான் யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் சிங்கபூராக மாற்ற போகின்றீர்களா?
எதற்காக மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? ஏன் பொய்களை கூறுகின்றீர்கள்? இந்த கால்நடை வளர்ப்பாளர்களான பண்ணையாளர்கள் அப்பாவிகள். இந்த பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் குரல்கொடுத்துக் கொண்டிருப்போம் ஓயப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.