முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை
இலங்கையிள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் அதிபர் மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.1.78 கோடி ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உணவு, பெட்ரோல், டீசல், தானியங்கள் ஆகியவற்றிற்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டதோடு, பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டது.
இந்நிலையில், அப்போதய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
வழக்கின் விசாரணை
அதன்போது, போராட்டம் முற்றியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ரூ.1.78 கோடி பணத்தை கண்டெடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அந்த பணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டாபயவிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஊழல் விசாரணை ஆணையத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த வழக்கின் விசாரணைகளானது கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, அந்த பணம் தன்னுடையது என்றும், அதை திருப்பி தரும்படியும் கோட்டாபய வாதாடியுள்ளார்.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கபெறாததால் வழக்கை கைவிடுவதாக கொழும்பு நீதிமன்றத்தில் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.