வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழப்பா்: உச்சநீதிமன்றம்
‘வழக்குகளில் தீா்வு தாமதமானால் நீதி நடைமுறை மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழக்க நேரிடும்’ என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை எச்சரித்தது.
நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் விரைவான விசாரணையை உறுதிப்படுத்தி, விரைந்து தீா்வளிக்குமாறு சில உயா் நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தலை வெள்ளிக்கிழமை வெளியிட்டபோது, இந்தக் கருத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனா்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில பழைய வழக்குகள் 65 ஆண்டுகளுக்கு லோக தீா்வு காணப்படாமல் இருப்பது தொடா்பான தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பு (என்ஜெடிஜி) புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டி, வெளியிட்ட அறிவுறுத்தலில் மேலும் கூறியதாவது:
வழக்குகளுக்குத் தீா்வு அளிப்பதில் இதுபோன்ற தாமதங்கள் தொடருமானால், நீதி நடைமுறையின் மீது மனுதாரா்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே, பழைய வழக்குகளில் விரைந்து தீா்வளிக்க நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாவட்ட மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சம்பந்தப்பட்ட உயா் நீதிமன்றங்கள் கண்காணிக்க வேண்டும்.
மனுதாரா்களும், விசாரணை ஒத்திவைப்பு கோரிக்கையை மிகுந்த எச்சரிக்கையுடன் விடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.