ஹமாஸ் அமைப்பின் கோரமுகத்தை அம்பலமாக்கும் ஹமாஸ் அமைப்பின் வாரிசு
பலஸ்தீனில் இயங்கிவரும் அமைப்பான ஹமாஸ், குழந்தைகள், பெண்களை கொடூரமாக கொலை செய்வதாக, ஹமாஸ் குழு தலைவர்களுள் ஒருவரின் மகனான மொசாப் ஹசன் யூசப் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்திருந்தார்.
அண்மையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மொசாப் ஹசன் என்ற இவர் தற்போது அமெரிக்காவிடம் அடைக்கலம் கேட்டு வருகிறார்.
ஈவு இரக்கமின்றி
நான் ஹமாஸ் தலைவரின் மகன் (அப்பாவின் பெயரை குறிப்பிடவில்லை), ஆனால், உண்மையில் ஹமாஸ் தலைவர்களுக்கு பாலஸ்தீன மக்களை பற்றிய எந்த கவலையும் இல்லை என அவர் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினரைப் பற்றி மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மனித உயிர்களை அவர்கள் மதிப்பதில்லை, அவர்கள் புரிந்த கொடூரங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன், என்று ஹமாஸ் அமைப்பினரின் முகத்திரையை அவர் கிழித்தார்.
ஹமாஸ் ஒரு மதவாத அமைப்பு, தேசியத்தைப் பற்றி அவர்களுக்கு எந்தவிதமான கவலையுமில்லை, உண்மையை சொல்லப்போனால், அவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள், அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் பலஸ்தீனத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1996ல் நான் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தபோது இவர்கள் ஏராளமான பலஸ்தீனியர்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர்.
அப்போது தான் ஹமாஸ் இயக்கத்தினருடன் இருக்க முடியாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன், காசா பகுதியை ஹமாஸ் இயக்கத்தினர் ஆட்சி செய்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என அந்த வேளையிலே யோசித்தேன், இஸ்ரேலை அவர்கள் வென்றுவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் நான் யோசித்தேன்.
கொடூர முகம்
அவர்கள் பலஸ்தீனியர்களையும் கொன்றுவிடுவார்கள், உண்மையில் நான் ஹமாஸ் அமைப்பில் ஒரு இளவரசரைப் போல இருந்தபோதும், எனக்கு அவர்களைப் பிடிக்கவில்லை.
இப்படியே 25 ஆண்டுகள் ஓடிவிட்டன, காசா அவர்கள் ஆட்சியில் இருக்கிறது, இப்போது நடக்கும் சண்டைகள் மூலம் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை காட்டிவிட்டனர்.
இப்போது அவர்களிடம் 200 பிணைக்கைதிகள் உள்ளனர், குழந்தைகளை கூட அவர்கள் கொன்றிருக்கிறார்கள், இதுதான் அவர்களின் கொடூர முகம்.
முடிந்த வரை பொதுமக்களை காசாவில் இருந்து வெளியேற்ற வேண்டும், குழந்தைகளையும், பெண்களையும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் எகிப்து நாட்டிற்கு அனுப்ப வேண்டும், தேவைப்பட்டால் காசாவை வடக்கு, தெற்கு என்று பிரிக்க வேண்டும்.
வடக்கு காசாவில் தான் பெரும்பாலான சுரங்க வழிகளும், பதுங்கு குழிகளும் இருக்கின்றன, அதனால் ஹமாஸ் அமைப்பினரை அங்கு வைத்து முற்றுகையிட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் என்பவை கிடைக்காமல் செய்ய வேண்டும்.
ஈரானுக்காக ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ள சுரங்க பாதைகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டவை என்பதால் அதற்குள் விஷவாயுவை செலுத்தி விட வேண்டும், அவர்களிடம் இருந்து காசாவையும் அப்பாவி மக்களையும் காக்க இதுவே வழி எனவும் அவர் தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பினரை முற்றாக ஒழித்த பிறகுதான் காசாவிற்கு நிதியுதவி வழங்க வேண்டும், ஏனென்றால் இந்த உதவிகள் ஹமாஸ் அமைப்பினருக்கு கிடைக்கக் கூடாது.
இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி ஹமாஸ் அமைப்பினரை அழித்து, அதன்பிறகு பலஸ்தீனர்களின் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றும் அரேபிய நாடுகளுக்கு எகிப்தை தலைமை தாங்க விட வேண்டும் என்றும் இப்போது காசாவிற்கு செய்யும் உதவிகள் தவறாகவே முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்போது தான் நாம் ஈரான் பற்றியும், ரஷ்யா பற்றியும் பேசுகிறோம், ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான், ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறது.
இந்த பிரச்னைக்கு முக்கியமான காரணம் ஈரான் தான், பலஸ்தீனர்களை கவசமாக பயன்படுத்தி ஈரானுக்காக ஹமாஸ் வேலை செய்கிறது என்று அவர் இதன் போது தெரிவித்தார்.