ஐ.எம்.எப் நிதிக்காக மக்களுக்கு பெரும் சுமையை கொடுக்கும் அரசாங்கம்: சிறீதரன் காட்டம்
ஐ.எம்.எப்பின் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு அரசாங்கம் பெரும் சுமையை கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் 01 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வைர விழாவில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு பெரும் சுமை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அரசாங்கம் ஐ.எம்.எப் இரண்டாம் கட்ட நிதியினை பெறுவதற்காக நாட்டு மக்களுக்கு பெரும் சுமையை கொடுத்து வருகிறது.
இதனால் ஐ.எம்.எப்பின் இரண்டாம் கட்ட கொடுப்பனவை பெறுவதற்கு மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றின் விலைகளை தாம் நினைத்தவாறு அதிகரித்து வருகிறது.
எனினும் நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளமோ அல்லது தனியார் ஒருவரின் நாளாந்த சம்பளமோ அதிகரிக்கப்படவில்லை.
வெறுமனே அரசாங்கம் தான் நினைத்தவாறு பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த நாட்டில் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.