;
Athirady Tamil News

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா!

0

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இடத்தினை இன்று (21) பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

காலதாமதம்
“கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான விடயத்தை பார்க்கும் போது ஏற்கனவே இறுதி நாளன்று 17 உடலங்கள் புதைகுழியின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டதாகவும், நிறுத்தப்பட்ட தினத்தின் போது ஒக்டோபர் மாதம் நடுப்பகுதி அல்லது பிற்பகுதி அடுத்த அகழ்வு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அண்மையில் நிதி போதாத நிலமையை சுட்டிக்காட்டி காலதாமதம் ஆகலாம் என்று ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எங்களுக்கு இதில் ஒரு ஐயம் ஏற்படுகின்றது என்னவென்றால் காலதாமதங்கள், நிதி இல்லை என்று கூறுவதும், ஒக்டோபர் மாதத்திற்கு பிற்போடப்பட்டதும், குறித்த காலப்பகுதி மழை காலமாக இருப்பதாலும் இப்படியே மூடி மறைக்கப்பட்டு விடுமோ என்ற சந்தேகம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தாங்கள் ஒப்படைத்த பிள்ளைகளை தருமாறு கூறி 2000 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

உறவுகளை தவிர மக்கள் என்ற வகையில் தங்களுடைய உறவுகளுக்கு இறுதி யுத்தத்தில் சரணடைந்த உறவுகளுக்கு என்ன நேர்ந்தது? என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசாங்கத்தினுடைய இவ்வாறான ஒரு அறிவித்தலானது இனப்படுகொலை என்று கூறி உண்மைத்தன்மையோடு வெளிவர வேண்டிய இந்த சந்தர்ப்பங்கள் அரசாங்கத்தினால் மூடி மறைக்கப்படுகின்றதா? என்ற கேள்வி மக்களிடத்திலே எழுகின்றது.

சட்டத்தின் ஆட்சி
தயவுசெய்து உண்மைத் தன்மையோடு செயற்படுத்துங்கள். சட்டத்தின் ஆட்சியை நடத்துங்கள் வெளிப்படைத்தன்மையை மக்களோடு பேணுங்கள்.

இந்த வகையில் நடந்தால் உங்களுடைய நடவடிக்கைகள் அத்துமீறிய இனப்படுகொலையை செய்ததற்கான சாட்சியாக கூட அமையும்.

இதற்கு அரசாங்கத்தோடு சேர்ந்து துணை போகின்ற நடவடிக்கையையும் விட்டு ஆழ அகன்று அதிலுள்ள உண்மைதன்மை வெளிப்படக்கூடியதாக எத்தனை உடலங்கள் இருந்தது? எப்போது இந்த உடலங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்தும் வெளிவரக்கூடிய வகையில், சட்டத்தின் ஆட்சி நடைபெற கூடிய வகையில் குறித்த அகழ்வுபணியை தொடர்ந்து செய்யுங்கள் என கேட்டுக் கொள்வதோடு மக்களை ஏமாற்றாதீர்கள் தமிழ் மக்களுக்கு நேர்ந்த இனப்படுகொலையை மூடி மறைக்க வேண்டாம்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.