இந்தியா கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய விவகாரத்தில் ஒப்புதல் இல்லை: அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவிப்பு
இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என கனடாவின் நட்பு நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
ஜூன் மாதம் 18ஆம் திகதி, சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்ட நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு இந்தியா கனடாவை அறிவுறுத்தியது. அதன்படி, கனடா இந்தியாவிலிருந்து கனேடிய தூதரக அதிகாரிகள் 41பேரை குடும்பத்துடன் திரும்ப அழைத்துக்கொண்டது.
கனடா இந்திய தூதரக உறவில் மோதல் ஏற்பட்டதிலிருந்து, இதுவரை கனடாவின் நட்பு நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் எதையும் வெளிப்படையாக கூறவில்லை.
ஆனால், இப்போது அவ்விரண்டு நாடுகளும், இந்திய வலியுறுத்தலின்பேரில் கனேடிய தூதரக அதிகாரிகள் 41 பேரை கனடா திருப்பி அழைத்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக, எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் பிரித்தானியாவும், இந்தியாவுடனான உறவில் பாதிப்பு ஏற்படுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ள அரசியல் வல்லுநர்கள், ஆனாலும், நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமை இரு நாடுகளும் வெளியிட்ட அறிக்கைகள் நேரடியான கூற்றுக்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவிலிருந்து வெளியேறியுள்ள விவகாரம் குறித்து தாங்கள் கவலையடைந்துள்ளதாக அமெரிக்க மாகாணங்கள் துறை செய்தித்தொடர்பாளரான Matthew Miller தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு நாட்டுடனானபிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு நாட்டின் தூதர்கள் அந்நாட்டில் தங்கியிருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க மாகாணங்கள் துறை, இந்தியாவில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வலியுறுத்தவேண்டாம் என்றும், கனடா மேற்கொண்டுவரும் விசாரணையில் ஒத்துழைப்பு அளிக்குமாறும் நாங்கள் இந்தியாவை வலியுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளது.
மேலும், தூதரக உறவுகள் குறித்த 1961ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தை மதித்து நடப்பதில், இந்தியா தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் என அமெரிக்கா நம்புவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.
அதேபோல, கனேடிய தூதரக அதிகாரிகள் பலர் இந்தியாவை விட்டு வெளியேறும் வகையில் இந்திய அரசு எடுத்துள்ள முடிவில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை என பிரித்தானிய வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய வெளியுறவு அலுவலகமும் வியன்னா ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டியுள்ளது. தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மற்றும் விதிவிலக்குகளை ஒருதலைபட்சமாக அகற்றுவது, வியன்னா மாநாட்டின் கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை, இந்த விடயத்தில் அந்த ஒப்பந்தம் முறையாக செயல்படுத்தப்படுவது போலவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது பிரித்தானிய வெளியுறவு அலுவலகம்.